1 Comment

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

Kiliஇயற்றியவர்

சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர்

மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill

*************************************

தானதன தானதனத் தந்தனதான –தானத்

தந்தனத் தானதனத் தந்தனதான

————————————————————————————

ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்

   கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?

தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை

   மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்

பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்

   போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்

அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை

   ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்

தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த

   மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்

அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்

   அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.

எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது

   வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!

செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்

   கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!

எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்

   பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!

எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்

   விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!

காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்

   அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்

சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்

   தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?

மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்

   என்னாடு என்னாடி நரம்பில்ஏறி

வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்

   பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே

தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்

   தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்

தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்

   எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்

தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே

   முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்

குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை

   குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்

தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு

   துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்

தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால்  – என்கை

   அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்

தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்

   தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்

என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது

   ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!

கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்

   கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!

One comment on “உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

  1. ஐயா,

    பீகாரில் ​மாத்திரமல்ல தமிழகத்திலும் பல கிளிகள் உளக்கிடக்கையை வெளிபடுத்த முடியாமல் இப்படித்தான் தவித்துக் கொண்டிருக்கின்றன.

Leave a comment